அம்மாவின் அன்பிற்கு அளவேது ?
அவியலோடு
அன்னமிட்டு
அழைப்பிசைப்பாள்,
அடங்காமல்
அங்கிங்கு
அளாவித்திரிவேன்.
அடுப்படி
அண்டாமல்
அணைதொடுப்பாள்,
அதைத்தாண்டி
அண்டாவில்
அலையடிப்பேன்.
அப்பாலே போவென்று
அதட்டிடுவாள்.
அருகம்புல்
அளவுகோலில்
அடித்துரைப்பாள்.
அச்சத்தில்
அரண்டே
அழுதிடுவேன்,
அரும்புடல்
அள்ளியே
அணைத்திடுவாள்.
அணிகலன்
அலங்கரித்து
அரசனாக்குவாள்,
அரியணை நனைத்து
அசடு வழிவேன்.
அவயம்
அனைத்தும் துடைத்தென்னை
அல்லிப்பூமுடித்து
அழகூட்டுவாள் !
அலைக்கழிக்கலாமென்றே
அலமாரி அடியே ,
அப்பாவின் ஆடையுடுத்தி
அமர்ந்தொளிவேன்
அக்கறைதேடலில்
அளந்திடுவாள்
அத்தனை
அறையையும்
அன்னையுணர்வால்...
அதிகாலை குளிருக்கு
அனல் சேர்ப்பாள்.
அந்திமழைக்கென்னை
அடை காப்பாள்.
அம்புலிக்கதையாலே
அமுதூட்டியே!
அளிதல் புரிந்தே உறங்கவைப்பாள்
அயர்வது போல் நாடகமொன்றை
அரங்கேற்றியே !
அவளையே நானும் தூங்கவைப்பேன்
அந்த
அதிசய தாயின் துயிலழகை
அமைதியாய் பார்த்து
அகமகிழ்வேன்
அண்ணாந்து பார்க்கும்
அண்டவெளி போல்
அகண்டு பரவும் உனதன்பிற்கு
அடைக்கும் தாழ் இங்குண்டோ!
அம்மாவின்
அன்பிற்கு
அளவேது ?
இம்மானுவேல்.ம
கோயம்புத்தூர்
வலைப்பக்கம் : http://manuvel.blogspot.com
ur mom is lucky 2 have a such a son like u.
ReplyDelete