Thursday, September 15, 2011

எங்கே போனது எங்கள் தமிழ் ?

விரைந்து போகின்றது காலம் அதில்
மறைந்து போகின்றது தமிழ் !

அறிவித்த ஆசிரியர்களும்
தெளிவித்த அறிஞர் பெருமான்களும்
தேடியே சேர்க்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை
அயல்மொழிவழிக்கல்வியில்

வீதியில் விளம்பரமும்
வீடேறும் கடிதங்களும் ஏந்தியே
திரிகின்றன அம்மொழியை

தேநீரும் கொட்டைவடிநீரும் குடித்தால் திகட்டலாம்
தமிழில் படித்தால் திகட்டுமோ ?

அம்மாவென்றும் அப்பாவென்றும்
தாய்மொழியில் அழைப்பதில் தரிக்கும் இன்பம்
அந்நியமொழியில் தரித்திடுமோ ?

இரண்டாயிரம் வருடம்
முதிர்ந்தவள் என்றாலும்
முலைப்பால் கொடுத்தவளல்லவா?

கூனிக் குறுகி நடக்கிறாள் அவள்
குடிசை கொடாவிடிலும்
குச்சியாவது கொடுங்கள் !

உங்கள் சந்ததிக்கு
அயல்மொழிக்கு அர்த்தம் தேடும்
அகராதிகள் அழித்துவிட்டு
தாய்மொழிக்கு அர்த்தம் தேடும்
அகராதிகளை அளித்துவிடாதிர்கள்

உயிருக்கு மொழிகொடுத்த தமிழ்த் தாயவளை
இறக்கவிடாதிர் நண்பர்களே உங்களை
இரஞ்சியே கேட்கிறோம் !

Monday, September 12, 2011

தினசரி நாட்காட்டி

கண்கள் .
வலது புற கண்ணாடி ஜன்னலில்
உன் முகத்தை எனக்கே
வரைந்து காட்டுகிறது

காதுகள் .
அலைபேசியுடன் அடிக்கடி
சேர்ந்துகொண்டு
உன் அழைப்பை ஏந்தி வருவதுபோல
வேஷம் பூசி பின் வேறு குரலை தேர்வு செய்கிறது


உதடுகள் .
நீ சென்ற வாரம் மீதம் வைத்து சென்ற
கதையை தப்பு தப்பாய் சொல்லிக்கொண்டிருக்கிறது
கோயில் பூக்களிடம் உன் சார்பாக

கைகள் .
நீ இருக்கும் இடம் நோக்கி
நீண்டு நீண்டு சுருக்குகிறது இரவு பாயை
தூங்குவதற்கு முன்னரே

கால்கள் .
வாசல் வரை சென்றுவிட்டு திரும்புகிறது
நூறுமுறை வெறுமனே
வழக்கமாய் நீ வரும் வாரத்தின் ஓரங்களில்


இதயம்.
உன் நினைவுகளோடு
ஐந்து நாட்கள் நடத்தும் நாடகத்தில்
நடிக்கிறேன் என்னை சுற்றும் உறவுகளோடு
சிரிப்புக்குள் பல
பாத்திரங்களை உள்ளடக்கியவளாய்


சில சமயம் தோன்றும் என்னில்
உனக்கும் எனக்கும் சேர்ந்தாற்போல்
சனியும் ஞாயிறும் மட்டும் உள்ள
ஒரு தினசரி நாள்காட்டியை
உருவாக்கலாமா என்று

Monday, September 5, 2011

எச்சில் நிமிடங்கள்

அடித்து ,உதைத்து, மிதித்து

ஏறிக்கொள்கிறது கால்கள்
பின் ஓரமாய் பட்டாலே
ஓங்கி வலிக்கிறது.

நாலு நாளாய் தான்
குளிக்கவில்லை என்றாலும்
அருகிலிருப்பவர் வியர்வைக்கு
விளக்கம் கேட்கிறது மூக்கு .

சாய்ந்துகொள்ள சௌகர்யம்
தேடுகிறது முதுகு
கிடைக்கவில்லை என்றால்
பிறர் முதுகை அசௌகரியபடுத்துகிறது .

யாரவது எழ மாட்டார்களா ?
எட்டுத்திசையும் சுற்றிப்பாக்கிறது
எழுந்துவிட்டால் வேலி அமைத்து
வழி கொடுக்கிறது கரங்கள்.

இன்னும் தீரவில்லை
இந்தப்போராட்டம் அடுத்ததாக
ஜன்னலோரம் அமர
அருகிலிருப்பவனை அவசரப்படுத்தி
வீட்டுக்கு அனுப்புகிறது

எல்லாம் முடிந்ததா என்றால்
இல்லவே இல்லை
பேருந்தின் ஓர இருக்கையில்
தூங்குவதுபோல் நடிக்கிறது
கம்பியைபிடித்தபடி நிற்கிறாள்
ஒருத்தி கைக்குழந்தையுடன்
முடியப்போகும் பத்தாவது நிமிடத்தில்
பின்னாலே திரும்பிப் பார்க்கிறது
தெரிந்தவர்கள் தெரிகிறார்களா என்று
இறங்கும் போதும் கூட இறங்காத
இரக்கத்தோடு

துப்ப நினைக்கும் போதே
ஊறிவிடுகிற
இந்த காலத்தின் எச்சில் துளிகள்
வேண்டியவர்க்கு மட்டும்
ததும்பி வழிகிறது
வேண்டாதவர்க்கோ
தாகம் தெளிக்கிறது

Thursday, September 1, 2011

வெடிகுண்டு

அந்த மருத்துவமனை

அந்தியில்
இருக்கும் உயிர்களையும்
இல்லாமல் போனவர்களையும்
வைத்து அன்றைய
வருமான கணக்கெழுதிக்கொண்டிருந்தது

மரணம் எந்த அறை
திறந்துள்ளதென பார்த்து
நலம் விசாரிக்கும் சாக்கில்
நலிந்து போன இதயங்களை
இன்று இரவு நம்ம வீட்டுக்கு
போய்விடலாம் என்றது

அங்குள்ள
குழந்தைகள் அங்கும் இங்கும்
ஓடிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
இருந்தார்கள் அங்கே மாட்டியிருந்த
புகைப்படங்களில்


கழிவறையின்
கதவிடுக்கில்
கடிகாரம் பொருத்தி
நேரம் வைத்து
நகர்ந்தேன்

பிரசவ அறையின் முன்னே
ஏதோ ஒரு தலை பையனின்
தலைமகன் அவரது
தலை பையனுக்காய்
தலைகவிழ்ந்து காத்திருந்தார்

அறுபதிலும் அன்பு
அவள்மேல்
குறையவில்லை அவரிடம்
மூத்திரம் எடுக்கிறார்
பாத்திரத்தில்
கை கால் வராமல் போன
மனைவிக்காக

மருத்துவர்கள்
ஏதோ ஒரு அவசரபிரிவிற்கு
அணைபோட முயன்று
கொண்டிருந்தார்கள்
யாருக்கோ
அவர் அவசியம் என்று

வாடிக்கையாளர் நேரம்
இன்னும்
இருபது நிமிடம் என
இருமிக்கொண்டிருந்தது
ஒலிப்பெருக்கி
கடைசியாக

தீவிரவாதத்தின்
மதம் என்னுள்
பிடிவாதமாய் இருக்க
இரக்கமில்லாமல்
இதயம் இறுக்கி நடந்தேன்
வாயிலை நோக்கி

யாரோ ஒருத்தருக்கு
வேகவைத்த
வாய்க்கரிசியை
வேகமாய் எடுத்து செல்கிறான்
என்னைபோன்ற
இளைஞன்

அவசர ஊர்தி உயிர்வலிக்க
கத்திக்கொண்டு வந்து
உயிர்பலியை தவிர்க்க
ஆசுவாசப்படுத்தி நின்றது
அதில் இருந்த
ஐந்து வயது சிறுவனின்
தலையிலிருந்து ரத்தம்
உடல் பாதுகாப்பிலிருந்து
விரைவாய் தப்பித்து கொண்டிருந்தது

ஊர்தியை கடக்க எத்தனிக்கையில்
யாரோ ஒருவர் என் தோளில் இடிக்க
பின்மண்டை அதன் கதவில் இடிக்க
மரணவலியை ஒத்திகை பார்த்து
மயங்கதுவங்கினேன்.
அருகிலிருந்த மருத்துவர் ஒருவர்
மங்கலாய் நெருங்கினார் விழிகளினருகே

கழிவறையின் மூலையில்
அந்த வெடிகுண்டு
மரணத்தோடு கட்டித்தழுவி
வைத்தவனையே
வெல்லப்போகிறோம் என்று
வாழ்த்து வாங்கிக்கொண்டிருந்தது.

ஒரு அரசியல்வாதியை
கொன்று போட வேளை
கிடைக்காமல் இத்தனை
உயிர்களுக்கு விலை
பேசிவிட்டேன் என்று நினைக்க
கண்களின் ஓரத்தில் நீர்த்துளி
வழிந்தோடிய குருதியோடு கலந்து
அப்பொழுதும் என்னில் உள்ள
தீவிரவாதம் மனிதாபிமானத்தை
தெரிவிக்க அனுமதி மறுத்தது
இனிமேல் நமக்கு நிரந்தர
ஓய்வுதான் என்று இமைகள் இரண்டும்
மூடிக்கொண்டன.

“பத்துமணிக்கு நான்
மீண்டும் வந்து பார்க்கிறேன் “ என்ற
மருத்துவரின் குரல்
நான் இன்னும் மரணிக்கவில்லை என
மூளைக்கு நம்பிக்கை அளிக்க
கண்திறந்து பார்க்கிறேன்
செவிலிப்பெண் ஒருத்தி
ஊசியில் மருந்தேற்றிக்கொண்டிருந்தாள்

அதே வேகத்தோடு வெடிகுண்டு
ஏன் இன்னும் வெடிக்கவில்லை
கேள்வி என்னுள் ஏற
அந்த அறையின் கடிகாரம்
வெடிக்கும் காலத்தை தாண்டி
விடியலைநோக்கி
மெதுவாய் ஓடிக்கொண்டிருந்தது
அவளிடம் சொல்லிவிட்டு
கழிவறையை பார்த்து நடந்தேன்.

அறையுனுள்ளே ஒருவரின்
ஆக்கிரமிப்பு அதனுள்ளிருந்துவரும்
நீர்விழும் ஓசை தெளிவாக்கிற்று
காத்திருந்தேன் கதவுதிறப்பிர்க்காக
இரண்டு நிமிடங்களில் வெளியேறினார்
நடுத்தரவயதுக்காரர்.
உள்ளே நுழைந்தேன்
தூக்கிவாரிப்போட்டது அங்கே எதுவுமில்லை

வெளியில்வந்து தாழிட்டுத்
திரும்பையில் எதிரில் நின்று
புன்சிரிப்புதிர்க்கிறார் மருத்துவர்
அத்தனை உயிர்களோடு
என்னையும் காத்த
மனிதாபிமானத்தை
சிவப்பு கூட்டல் குறியோடு
நெஞ்சில் சேர்த்து நிற்கிறார்
அவரின் வெள்ளை அங்கியின்
பரிசுத்ததில் என் தீவரவாதமும்
நீக்கப்பட்ட அந்த வெடிகுண்டும்
செயலிழந்து போயிருந்தது...


Sunday, August 28, 2011

அன்புள்ள அண்ணா

அன்று அமாவாசை
அம்மாவும்
அப்பாவும் என்றோ
என்னை மறந்து
மறைந்து போயிருந்தார்கள்
ஒரு தட்டில் புட்டுக்களை
எடுத்து வந்து உண்ண அழைத்தான்
உண்ணவேண்டுமென்றால்
கதை வேண்டுமென்றேன்
நிலாகதை சொல்லி அதில்
இரண்டு புட்டை ஊட்டினான்
பின் நிலா வேண்டுமென்றேன்
மீதமுள்ள ஒன்றை எடுத்து
வானத்தோடு ஒட்டி வைத்து
நிலாவாக்கினான்.
விடாமல் அவனையும்
மீண்டும் கேட்டேன் நிலா பக்கத்தில்
வேண்டுமென்று
சளைக்காமல் அவனுமே
தீர்ந்து போன புட்டை விட்டு
தட்டை காட்டினான்
ஓயாமல் நானும்
நிலவில் வண்ணம் வேண்டினேன்
புதினா சட்னியிலே தட்டுக்கு
பச்சை வண்ணமேற்றினான்
இப்படியே
பல கேள்விகளுக்கு
பதிலையும்
சில கேள்விகளுக்கு சிரிப்பையும்
பரிசாய் அளித்தான்....
நானும் வளர்ந்தேன்
என் ஞானமும் வளர்ந்தது
இன்று அமாவாசை
அம்மாவாக நான்
அப்பாவாக கணவர்
அண்ணா கூறிய
நிலாக்கதையை என் மகனுக்கு
நான் சொல்லிகொண்டிருந்தேன் ....
இருளோடு காணாமல் போன அந்த அன்பையும் சேர்த்து .

Friday, August 26, 2011

மலரட்டும் மனிதநேயம்

எங்கோ ஒரு தேசத்தில்
மனிதனே மனிதனை
மாண்பிழந்து வதை செய்ய.
இங்கே மனமுருகி வேண்டிடும் நேசம் !


ஏதோ ஒரு வெள்ளத்தில்
உடையிழந்து உறைவிடமிழந்து
உறவும் இழந்து உண்ணத்தவிக்கும் உயிர்களுக்கு
இதோ என்றளித்து உருகிப்பெருகும் பாசம் !

எப்படியோ ஒரு சாலையில்
படைத்த வாகனமே நொறுக்கி
படுக்கையாக்கி குற்றுயிராக்கி செல்கையில்
அப்படியே அணைத்துதவும் ஈரம் !

இவ்வாறெல்லாம்
இன்னும் எத்தனையோ தருணங்களில்
நெஞ்சத்தில் பிறப்பெடுக்கும்
அன்பின் மாற்றுருக்கள்
மலரட்டும் மனிதநேயமாய்
மனிதனுக்குள் ஆயிரமாயிரமாய் ...

Friday, August 19, 2011

தலைகவசம்

அலுவலக பயணம்
ஆரம்பம் இன்னும்
ஐந்து நிமிடங்களில்
செய்தி வாசித்தது
கடிகாரம்

இரையை எடுத்துக்கொண்டு
இரை தேட புறப்பட்டேன்

இருசக்கர இயந்திர உலாவியை
இயக்கினேன்
இயற்கையின் குளிருக்கு
அது மட்டும் என்ன விதிவிலக்கா
இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் என்று
எழ மறுத்தது

விடைகொடுக்கும் மனைவியின்
புன்னகைக்கும் அவளின்
கண்கள் உதிர்க்கும்
பயமொழிக்கும்
அனைத்து சாலைவிதிகளும் வந்து
உறவு ஏற்படுத்தி விட்டு போனது

உள்ளேயிருந்து
ஓடிவந்து கையசைக்கும்
துடுக்கு மகனின்
உள்ளத்திலிருப்பது
நன்றாகவே கேட்டது
"உள்ளேன் ஐயா " பள்ளி
பிடிக்கவில்லை என்றும்
உன்கூடவே வந்துவிடவா? என்று
கேட்பதையும்

கிராமத்தின் நான்கைந்து
தெருக்களின் முனைகளில்
உறங்கிக்கொண்டிருக்கும் காற்றின்
தூக்கத்தை கிள்ளிவிட்டு
மண் சாலையிலிருந்து
தார்ச்சாலைக்கு தாவினேன்

நேற்றைய இரவின் மழைக்களித்த
நிலத்தின் விருந்தோம்பல்
அடையாளமாய் எஞ்சியிருந்த
மண் விருந்தின் மணம்
காற்றெங்கும் பரவியிருந்தது


வழியெங்கும் தென்னை அன்னைகள்
வருவோர்க்கும் போவோர்க்கும்
வலக்கையினால்
ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்கள்

பாதையின் மையத்தில்
எந்த வாகனமோ
நியாயதீர்ப்பெழுதி
தவளைக்கு மரணமும்
எறும்புக்கு உணவும்
ஒரு சேர வழங்கியிருந்தது



"நெடுஞ்சாலை சந்திப்பு
கவனமாக செல்லவும் "
கூடவே கீழே
"மரம் வளர்ப்போம்
மண்வளம் காப்போம் "
ஆலமரத்தை அகற்றிப்
பொருத்திய
அறிவிப்பு பலகை

முகப்புறக்கண்ணாடி
மரங்களை விழுங்குவதை
விட்டுவிட்டு
வாகனங்களை விழுங்க
ஆரம்பித்தது

மாநகராட்சி தங்களை அன்புடன்
வரவேற்கிறது
மனதை தயார்படுத்தியது
வாகன நெருக்கடிச்சாலைக்காக


என்னைப்போல் இல்லாமல்
எத்தனையோ காரணங்களுக்காக
பேருந்து பயணத்திற்காக
காத்திருக்கும் பேருந்து வாசிகள்
விலைவாசியை நினைவுபடுத்தி நின்றார்கள்

சாலையின் குறுக்குச்சந்திப்பை
நெருங்கினேன்
மின்சாரதேனீ மஞ்சள் பூவிலிருந்து
சிவப்பிற்கு நகர்ந்து
தேனெடுக்க ஆரம்பித்தது
வாகனத்தை அணைத்துவிட்டு
பச்சை பூவின் முறைக்காக
காத்திருந்தேன்

குடும்பகட்டுபாட்டையும்
சாலைவிதியையும்
சட்டைப்பையில் போட்டுவிட்டு
இருசக்கரத்தில் நிற்கும்
பெரிய குடும்பம்
இளமை என்ற
வேகம் ஏற்றப்பட்ட
கனவுலகத்தில்
அவசரமாய்
கையில் குறுஞ்செய்தி
ஆயாசமாய்
காதில் இசையுடன்
கல்லூரி இளைஞன்

மின்விளக்குகளிடம்
பணியை ஒப்படைத்துவிட்டு
அலைபேசி அரட்டை
மக்களின் நண்பனாக
மதிப்பிற்குரிய
காவல்துறை

அம்மா இந்த அண்ணா
எப்ப பள்ளிக்கு செல்வார்கள் ?
வினவும் சிறுமிக்கு
சாயங்காலம் என்று
சாமர்த்திய பதிலளித்தாள்
துண்டு பிரசுரம் விநியோகிக்கும்
சிறுவனின் சட்டையில்
கல்வியின் தரித்திரம்
பிரசுரமாயிருந்தது

அறுபது நொடிகளையும்
கண்ணில் எரித்துவிட்டு
வெறுப்பை புகையாய்
வெளிவிட்டு நகர ஆரம்பித்தார்கள்
அடுத்து வந்த
அபாய வளைவு
அண்மையில் தத்தெடுத்த
இரண்டு அபாயக் குழிக் குழந்தைகள்
வாகனமுகப்புகளின்
கண்ணாடி சிதறல்களை வைத்து
அங்கும் இங்கும்
உருட்டி விளையாடிக்கொண்டிருந்தன

இவைகளுக்கெல்லாம் மத்தியில்
அங்காங்கே நினைவினில் வந்து போயின
நேற்றைய மேலலுவலரின் வசை வார்த்தைகள்,
காலையில் அம்மா சொன்ன கால்வலி,
மனைவி காண்பித்த காலியான காபித்தூள் டப்பா.

தீடிரென்று
ஒரு ஆச்சர்யம்
தலைகவசமணிந்து சாலையில்
ஒரே ஒருத்தர்
அவரின் வாகனத்தில்
"ஆயுள் காப்பீட்டு முகவர்"
பின்புறம் பொறிக்கப்பட்டிருந்தது
அவருக்கல்லவா தெரியும் உயிரின் மதிப்பு

அதற்குள் அலுவலகத்தை
நெருங்கியிருந்தேன்
வழக்கம் போல
ஒரு விவாதக்கூட்டம்
காலையிலேயே ஆரம்பித்திருந்தது
ஆனால் இன்று அவர்களின்
நெற்றிசுருக்கில் அனுதாபம்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தது

அதில் ஒருவர்
"தலைக்கவசம் அணிந்து கூட
பிழைக்கவில்லை பாருங்களேன் என்றார் "
எப்படி நடந்திருக்கும் என்று
வினவுவதற்க்குள் இன்னொருவர்
"அதை போட்டு என்ன பயன்
தாடைக்கச்சையை மாட்டவில்லையே "
அப்படிஎன்றால்
தம்பிரான் புண்ணியத்தில்
தலைக்கவசம் மட்டுமே தப்பித்துக்கொண்டது
தலைமாட்டிக்கொண்டது என்று நகைச்சுவை
விடுக்கிறார் மற்றொருவர்

ஓரமாய் பூத்திருந்த
அழகான பூக்களிடம்
கொஞ்சம் சிரிப்பை கடன்வாங்கிக்கொண்டு
அலுவலகத்தினுள்ளே நுழைந்தேன்

அன்றைய நாள்முழுதுமாய்
ஆயுள் காப்பீட்டு முகவர்
என் உயிரின் மதிப்பை
விலை பேசிக்கொண்டிருந்தார்
எனக்குள்ளே !

தலைகவசம் அணிவீர்
தாடைக்கச்சையுடனே !!
எங்கோ படித்தது ...........................










































Tuesday, August 9, 2011

வாய்ப்பு

வலமிருந்தும் இடமிருந்தும்
மேலிருந்தும் கீழிருந்துமாக
விடை கேட்கும்
விந்தை உலகம்
அது
நடத்தும்
குறுக்கெழுத்துப்போட்டியில்
கட்டங்களுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
ஒரு அர்த்தமுள்ள வாக்கியம்

கடவுள்

யாரோ தூக்கி வீசிப்போன
ஓர் இரவு வாழ்க்கை ,
பஞ்ச பூதங்களும்
எஞ்சிய மரணமும் சொல்லும்
பயம் மிளிரும் கதைக்கொத்து ,
அவற்றில் எதில்
மயங்கித்தூங்குவோம் என்று
தெரியாமல்
கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருக்கும்
மனிதக்குழந்தை ,
கையில் கைப்பொம்மையாய்
ஒரு கடவுள்

முதல்வன்

பிரச்சார மேடை
அனைவருக்கும் வரவேற்ப்பு
அவனும் அவளும் கூட்டணி
வெற்றிச்சின்னம்
"
பூஜ்யம் "
வேட்பாளர்
பெருமதிப்பிற்குரிய
"
கேள்விக்குறி"

தேர்ந்தெடுக்கும் ஒருநாள்
சேர்ந்துநிக்கும் ஒரு நொடி
அவள் விருப்பத்தில்
அவன் கொணர்ந்த
பல்லாயிரம் வாக்குகளில்
ஒன்ன விட்டு மற்றதெல்லாம்
செல்லாமல் பல்லிளிக்க
மிச்சம் என்ன இரண்டுதானே ?
அவளொன்றும்
அவனொன்றுமாய்
சுட்டு விரல் மையிட
பூட்டப்பட்டது வாக்குப்பெட்டி


தேர்வுவிழா
முடிந்து போய்
வருட நிலாவின்
ஒன்பதாம் பிறை
ஓட இருக்கும் வேளையில்
முடிவுக்காய்
ஒருகுலம் தூங்காமல்
தவிக்கிறது



ஒருவனா ?
ஒருத்தியா ?
முதல்வர் யார் ?
வினா மூஞ்சிகள்
விண்ணைப்பார்த்தபடி.


உந்திகொண்டும்
முந்திக்கொடும்
ஒருத்தியல்ல
ஒருத்தன்தான் என்று
முன்னாலே முதல்வனாய்
அவனும் அவன் வீட்டிற்க்கு.


வாக்களித்த
அவனுக்கும்
அவளுக்கும்
பதவி அளித்த
பரந்தாமனுக்கும்
நன்றி தெரிவிக்கும் வகையில்

இதோ அவன்
வாழ்க்கை என்னும்
நன்றிக்கூட்ட மேடையில் .....

பாசம்

குடும்பங்களில்
தூறல் போட்டுகொண்டிருக்கும்
அன்பின் மழைப்பாசியில்
இறைவனும் சிலசமயம்
வழுக்கி விழுந்து விடுகிறான்

தூக்கம்

ஓய்வுக்காடாய்
ஒரு மரணம் தன்னை
உருவாக்கவே
தினம் தினம் நடுகிறான்
ஓய்வின் மரக்கன்றுகளை
தூக்கம் என்னும்
இருட்டுக்குழிகளில்..

பாதுகாப்பு

உடல் இரத்தத்தையும்
இரத்தம் உடலையும்
காத்துவரும்
பரஸ்பர பாதுகாப்பு
விந்தை

சதுரங்கள்

பன்னிரண்டு
சதுரங்களில் ஒன்று கூட
உதவவில்லை என்று
ஜோசியர் பார்த்த
பார்வையில் நான்
புரிந்துகொள்ளாமல் இல்லை
திருமணம் என்ற மணமில்லாமல்
போன பூவாய் அமர்ந்திருந்த
என் எதிரே
கையில் நீருடனும்
கண்களில் காதலுடனும்
நிற்கும் அவரின் மகள் !
உள்ளார சிரித்துக்கொண்டே
நகர்ந்தேன்
இவருக்கு ஒருவேளை
அந்த பதிமூன்றாவது சதுரத்தை பற்றி
தெரிய வாய்ப்பில்லையோ என்று !

ஒரு தாயின் கண்ணீர் .....

வண்ணங்களால் நிறம் கொள்ளும்
உன் ஆடைகளின்
சாயக்குளியல்களால் ஏன்?
கண் நரம்புகளின்
நிறம் கருப்பு வண்ணமாக !

மூச்சின் நுகர்தத்துவத்தை
உன் உயிர் அறியும்
ஆனாலும் ஏன்?
இயந்திரப் புகைகளாலும்
வேதியியல் வேள்விகளாலும்
என் மூச்செரிக்கிறாய்

கேட்கும் உறுப்பை எல்லாம்
உவகையுடன் உனக்களிக்கும்
மரங்கள் ,உன் வருங்கால
சந்ததியோடு வாழ விரும்பி கேட்டதை
தவறாக புரிந்துகொண்டாயா ?
உன் வீடுகளின் அலங்கரிப்பில்
உயிரற்று ஊமையாகிக்
கேட்கின்றன !

உணர்வுகளில் வேட்டு வைத்து
கல் எடுக்கிறாய் ,
தோள்களில் ஊசி ஏற்றி
நீர் எடுக்கிறாய் ,
வெற்றிடம் நிரப்ப
உடல் வெடித்துப்போகிறேன்
அதில் வீழ்ந்து மாயும்
யார் தார்மீக உணர்வேற்பது ?

சுவைக்கினிய மழைத்துளிகள்
சுவைமாறிப் போவதற்கு
காரணம்
நீ வானுக்கு வார்த்துக்கொண்டிருக்கும்
அமிலப் பாலின்
சுவைதானோ ?

என்னைப்போலோருத்தி
இந்த பிரபஞ்ச காட்டில்
உன்னுடன் வாழ விழைகிறாளாம்
தத்துக்கொடுக்க அழைத்திருக்கிறேன்
வருவதற்கு சில நூறு
வருடங்கள் ஆகுமாம்

அவள் வரும்வரை
வலிகள் இல்லாமல் வாழவிடு
உனக்காக என்னை ....